கண்ணீருடன் கேப்டன் ரோஹித்.. தோல்விக்கு பிறகு பேசியது என்ன?

நடப்பாண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள், நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டு 130 கோடி பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்கள் மற்றுமின்றி இந்தியர்கள் இன்னும் மீளமுடியாமல் கவலையில் உள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியை காண பிரதமர் முதல் இந்திய ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், முன்னாள் ஜாம்பவான்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீல நிற ஆடையால் மைதானத்தை கடல் மாதிரி மாத்தினர்.

2011 உலகக்கோப்பை போல் இம்முறையும் நாம் தான் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், 6வைத்து முறையாக கோப்பையை தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்களை வாய் அடைக்க செய்தது. அதாவது, உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இருப்பினும், சிறப்பான பந்துவீச்சு இருப்பதால் இந்திய அணி வெற்றியை சூடும் என நம்பப்பட்டது.

கலக்கத்தில் ‘கிங்’ கோலி.! ஆறுதல் கூறி தேற்றிய காதல் மனைவி.!

ஆனால், ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதனால் மனமுடைந்த இந்திய ரசிகர்கள், வீரர்கள் கண்ணீருடன் களத்தில் காணப்பட்டனர். ஆஸ்திரேலிய வெற்றியை தொடர்ந்து களத்தில், முகமது சிராஜ், கோலி, கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கண்ணீருடன் வெளியேறினர். இதை பார்க்கும்போது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதில் குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும், விராட் கோலியும் இணைந்து விளையாடும் இறுதி ஒருநாள் உலககோப்பையாக கூட இருக்கலாம். ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம் என ரசிகர்கள் புலம்புகிறார்கள். இருந்தாலும், உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், இந்திய அணி அனைவரது மனதையம் வென்றுள்ளது என்றே கூறலாம். அதுமட்டுமில்லாமல், இந்த தொடர் முழுவதும் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார்.

சிறந்த பீல்டர் விருதை வாங்கியது யார் தெரியுமா ..?

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை அடுத்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது. இன்றைய நாள் எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எல்லாம் வகையிலும் முயற்சித்து பார்த்துவிட்டோம். ஆனால், எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் முடிவு எங்களுக்கு பக்கம் இல்லை. கண்டிப்பாக இன்னும் 20-30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கேஎல் ராகுல், விராட் கோலி சிறப்பாக விளையாடி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். அப்போது, இலக்காக நாங்கள் 270-280 ரன்களைப் எதிர்பார்த்தோம்.  ஆனால், நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். இருந்தாலும், 240 ரன்கள் எடுத்திருக்கும்போது விக்கெட்டுகளை வேகமாக எடுத்திருக்க வேண்டும். அது முதல் 10 ஓவரில் நடந்தது. ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோருக்கு பாராட்டை தெரிவிக்க வேண்டும். இதனால் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. அண்டர் லைட்டில் (2வது இன்னிங்ஸ்) பேட்டிங் செய்வது சற்று சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை ஒரு சாக்காக சொல்லவில்லை. எனவே, எங்கள் தோல்விக்கு எந்த காரணங்களையும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. ஹெட் மற்றும் லாபுஷாக்னே சிறப்பாக ஆடினார். 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது சுலபம் தான். ஆனால், முதல் இன்னிங்ஸில் நாங்கள் அதிக ரன்களை எடுக்கவில்லை என கேப்டன் ரோஹித் சர்மா மனந்திறந்து கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்