#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட்!!

மம்தாவின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நேற்று மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,, உளவு பார்க்கும் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வந்தார். அப்போது, அந்த அறிக்கையின் நகலை அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி, அதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சாந்தனு சென் கிழித்தாக கூறப்படுகிறது.

அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி கிழித்த நகலை அவையின் துணை தலைவர் இருக்கையை நோக்கி எறிந்துள்ளார். இது அவையை அவமதிக்கும் செயலாகும் என்றும் துணை தலைவருக்கு அவமானம் மற்றும் அமைச்சரிடம் இருந்து ஆவணத்தை பிடுங்கியது அத்துமீறிய செயல் எனவும் நேற்று பாஜகவினர் புகார் அளித்திருந்தனர்.

திரிணாமுல் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரான ஹர்திக் சிங் பூரி தங்களை மிரட்டும் விதமாக நடந்துகொண்டதாக பதில் புகார் அளித்தனர். இந்த நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரிடமிருந்து அறிக்கையை பறித்து கிழித்து எறிந்த விவகாரம் தொடர்பாக எம்பி சாந்தனு சென் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கையில் எம்பி சாந்தனு சென் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. உளவு பார்ப்பது விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் 4வது நாளாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்