#BREAKING: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் – பெரும்பாலான கட்சியினர் கருத்து!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றுள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் உயர்மட்ட குழு கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் மாவட்ட மாநில அளவில் குழு அமைத்து ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக எம்.பி. கனிமொழி கருத்து கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யலாம் என்றும் மக்களுடன் கலந்து பேசி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று சிபிஐ-யின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால், தென் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் குறிப்புட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்