#BREAKING : பள்ளி விபத்து – உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர்

நெல்லையில் தனியார் பள்ளி கழிவறை இடிந்து விழுந்த சம்பவத்தில், உயிரிழந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவு.

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்த மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில். இப்பள்ளியில் இன்று காலை 10:50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி டி விஸ்வரஞ்சன் கே.அன்பழகன் மற்றும் ஆர். கதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் எம் இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.