#BREAKING: குடியரசு தின விழா – பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு.

நாடு முழுவதும் நாளை 73-வது குடியரசு தினம் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் அவர்கள் சனவரி திங்கள் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்ட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுதின நிகழ்ச்சிகளை தொலைகாட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகயில் இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், குடியரசுதின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வானொலியில், கண்டு கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்