#BREAKING: 30 பேர் ஆதரவு.. பொதுக்குழுவை தள்ளி வைக்க ஈபிஎஸ்-க்கு, ஓபிஎஸ் பகிரங்க கடிதம்! – வைத்திலிங்கம்

ஒன்றை தலைமை பிரச்சனை முடியாத நிலையில், அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி வலியுறுத்தி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார். ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை செய்தியாளர் சந்திப்பில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வாசித்தார். அதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஒற்றை தலைமை குறித்து தன்னிச்சையாக பேசி வருவது கட்சியில் களங்கம் மற்றும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றை தலைமை சர்ச்சையால் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. பொதுக்குழுவில் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாது என தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது அதிமுகவில் கடைபிடிக்கப்படும் நடைமுறை. ஜெயலலிதா காலத்தில் பொதுக்குழு நடக்கும்போது சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழுவிற்கு அழைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விவரம் கிடைக்கவில்லை என பல நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். எனவே, கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால், வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.  தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம் என்றும் பொதுக்குழுவுக்கான வேறொரு தேதியை நாம் இருவரும் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரும் கடிதம் நேற்றே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர சிலர் முயற்சிக்கின்றனர். கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் எண்ணம். 30 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் கூறினார். 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக சட்ட விதிகளின் படி ஒற்றை தலைமையை ஏற்படுத்த தனித்தீர்மானம் கொண்டுவர முடியாது. தொண்டர்கள் தேர்வு செய்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 5 ஆண்டு பதவி வகிப்பார், அதை மாற்ற முடியாது எனவும் திட்டவட்டமாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். இதனிடையே, ஓபிஎஸ் கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்து திட்டமிட்டபடி 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment