#BREAKING: ஓராண்டு நிறைவு.. பேரவையில் 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

இலவசம் என்ற திட்டத்தால் பெண்கள் சேமிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளனர் என ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் உரை.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் மெரினா கடக்கையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் நம்பிக்கையுடன் பேசுகிறேன். திமுக அரசின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. என் வாழ்வில் மறக்க முடியாத 29சி பேருந்து, அந்த பேருந்தில் தான் பள்ளிக்கு சென்று வந்தேன். அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி, பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டத்தால் பெண்கள் சேமிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளனர்.

பேருந்து சலுகை காரணமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.600 முதல் ரூ.1,200 வரை மிச்சமாகிறது. 106.34 கோடி பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகியுள்ளது. இதுவே அரசின் உண்மையான சாதனை. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன். 108 அவசர ஊர்தி மூலம் 16.41 லட்சம் லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள் என ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களில் ஓராண்டில் 70% திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதில், ஒன்று – அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, படிப்படியாக திட்டம் விரிவுபடுத்தப்படும். இரண்டு – ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மூன்று – டெல்லியைப் போன்று தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும். ரூ150 கோடியில் அரசு மற்றும் மாநகராட்சியைச் சேர்ந்த 25 பள்ளிகள் மேம்படுத்தப்படும். நான்கு – கிராமப்புறங்களைப் போல், நகர்ப்புறங்களில் மருத்துவநிலையங்களை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஐந்து – உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமானது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும். நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகள் அந்தந்த எம்எல்ஏக்கள் பரித்துரையின் அடிப்படையில் பரிசீலனைக்கு ஏற்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்