#BREAKING: குஜராத் தேர்தல் – வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு!

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார் என பாஜக அறிவிப்பு.

குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் அறிவித்துள்ளார்.

கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிட உள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இதுபோன்று, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக. அதன்படி, குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் ரிவபா ஜடேஜா. மேலும், குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment