#BREAKING: தேர்தல் வெற்றி – ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. அதில், 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மே 2ம் தேதி, வாக்கு எண்ணிக்கையன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள விதிகளை அனைத்து கட்சியினரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்