குண்டு வீச்சு சம்பவம்…குற்றச்செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் – டிஜிபி எச்சரிக்கை

குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பயங்கரவாதிகளிக்கு நிதி திரட்டிய புகாரின் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவில் தமிழகத்தில் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட  மாவட்டங்களில் சில இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பிரச்னைக்குரிய இடங்களை தேர்வு செய்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டது.

குறிப்பாக கோவையில் தொடர் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக மாநில கமாண்டோ பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் என மொத்தம் 3500 போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி, அந்தந்த மாவட்ட எஸ்பிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்த தொடர் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் சோதனையின் போது 11 பேர் கைது செய்யப்பட்டனர். மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு 1,410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இது குறித்து விசாரிக்க சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment