டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார் வெங்கய்யா நாயுடு

இந்தியாவின்  13வது துணை குடியரசுத் தலைவராக  வெங்கையா நாயுடு இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மாதம், 17ல் நடந்தது. இதில், பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து  கடந்த  மாதம் 25 ஆம் தேதி அவர், ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து  துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த, ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், நேற்றுடன் முடிவடைந்தது.
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலிலும் பாஜக  தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இந்தியாவின்  13வது துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு, இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக , தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர்  பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

Leave a Comment