தூத்துக்குடியில் 2 கோயில்களில் திருட்டு

தூத்துக்குடியில் இரண்டு கோயில்களில் பூட்டை உடைத்து அம்மன் தாலிச் சங்கிலி மற்றும் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதாநகரில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்ற நிலையில்,  வழக்கம்போல் பூஜை முடிந்ததும் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். கோயில் அர்ச்சகர் புதன்கிழமை காலை பூஜை செய்ய கோயிலுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது.  மேலும்,  அம்மன் சிலையில் இருந்த 4 பவுன் அம்மன் பொட்டு தாலி மற்றும் கோயில் பூஜை பொருள்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதேபோல்,  தாளமுத்துநகர் 2ஆவது தெருவில் உள்ள உச்சினிமாகாளி கோயிலிலும் மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சில்வர் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் உண்டியலில் அதிக தொகை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment