ஹிந்துத்துவ அரசியல் அதிகாரங்களை கிழித்தெறிய மீண்டும் தோன்றினார் “இராவணன்”

“சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல.” இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன.
நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என கோஷங்கள் எழுப்பி இருக்கின்றனர்.
விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இராவணன், மகிஷாசூரன் உருவ பொம்மைகளை எரிப்பதற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பத்திரிகை செய்தி பற்றி இங்கு ஏற்கனவே பகிரப்பட்டு இருந்தது.

பழங்குடி மக்களின் திருமணங்களில் இராவணனிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நிகழ்ச்சிகள் இப்போது வழக்கமாகி வருகின்றன.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்காளத்தில் பழங்குடி மக்களிடம் எதிர்க் கலாச்சாரம் பரவி வருகிறது. ’மகாராஷ்ட்ரா ராஜ்ய ஆதிவாசி பச்சோ அபியான்’ என்னும் அமைப்பு இராவணன் மீது வாரி இறைக்கப்பட்டு இருக்கும் அவதூறுகளுக்கு எதிராக பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. அவ்வமைப்பின் தலைவர், அசோக் பாகல், ‘இராவண வழிபாட்டை மையப்படுத்தி செயல்பாடுகள் இருந்தாலும், இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு, அவர்களின் ஆதாரங்களை மீட்டெடுப்பதுதான்’ அமைப்பின் நோக்கமாக சொல்கிறார்.
இந்திய வலதுசாரிகளின் பீடமான ஆர்.எஸ்.எஸ்ஸின் நெற்றிப் பொட்டில் விண்ணென்று உறைக்க, துடிதுடித்துக் கத்த ஆரம்பித்திருக்கிறது. அதன் தேசீயத் தலைவர்களில் ஒருவரான அனிருத்தா தேஷ் பாண்டே ‘இராவணனை மகிமைப்படுத்துவது’ என்பது நாட்டின் கலாச்சாரத்தையே பிளவுபடுத்துவதாகும் என அலறி இருக்கிறார். ‘பழங்குடி மக்களை கெடுக்கிறார்கள்’’ என புலம்புகிறார்கள். ஒன்றிரண்டு பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் ‘இராவணனை’ நாயகனாக கருதுகிறார்கள், பெரும்பாலானவர்கள் இன்னமும் ராமர் வெற்றி பெறுவதைத்தான் கொண்டாடுகிறார்கள்’ என்று தங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் தீப்பற்றி விட்டது. புகைய ஆரம்பித்து இருக்கிறது.
பார்ப்பனியம் காலம் காலமாய் இந்த சமூகத்தின் மூளைக்குள் ஏற்றி வைத்திருந்த பிம்பங்கள், சிந்தனைகளை தகர்த்து எறியும் விதைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.
யோகி ஆதித்தியநாத் 100 மீட்டர் உயரத்தில் இராமருக்கு சிலை வைக்கட்டும். அவர்களின் இதிகாசங்கள், காவியங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இராமரை மையப்படுத்திய அரசியல் அதிகாரங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிய இராவணன் மீண்டும் தோன்றி இருக்கிறார்.

எழுத்தாளர் மாதவ ராஜ்
தமிழ் மாநில பொதுச்செயலாளர்
அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் -BEFI 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment