கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தவறான தடை உத்தரவு..!

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம்ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இதில், 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மீது கடந்த 2002-ல் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் ஏற்படலாம் என்று முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தீர்ப்பு வழங்கப்பட இருந்த பஞ்ச்குலா நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கூடுவதை போலீஸார் தடுக்கத் தவறியதாக புகார் எழுந்தது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து பதிலளித்த மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மகாஜன், ‘கலவரத்துக்கு முன்பாக காவல்துறை தரப்பில் பிறப்பிக்கப்பட்ட 2 தடை உத்தரவுகளிலும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆயுதங்கள் வைத்திருக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதியில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடி கலவரம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து பஞ்ச்குலா பகுதி துணை ஆணையர் அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம் ரஹீமுக்கு விதிக்கப்படும் தண்டனையை ஹெலிகாப்டர் மூலம் அவர் அடைக்கப்பட்டுள்ள ரோதக் சிறைச்சாலைக்கே சென்று நீதிபதி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீர்ப்பளிக்கும் நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு பாதுகாப்பை அதிகரிக்க ஹரியானா மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
author avatar
Castro Murugan

Leave a Comment