அதிமுக ஆட்சி காலங்களில் மட்டுமே எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

சென்னை : அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது இந்த சம்பவத்துடன் 4-வது முறையாகும். அதிமுக எம்எல்ஏக்களுக்கு இது 2-வது முறையாகும். 1986ம் ஆண்டு தமிழக சட்டசபையில் திமுக சார்பில் அரசியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக தலைவர் கருணாநிதி உட்பட 10 எம்எல்ஏக்களை அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பின்னர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இரண்டாக உடைந்து, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என செயல்பட்டனர். அப்போது முதல்வராக பதவி ஏற்ற ஜானகி, 1988ம் ஆண்டு பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, அரசு கொறடாவை மீறியதாக ஜெயலலிதா அணியை சேர்ந்த 33 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை சபாநாயகர் தனபால் ஒரு ஆண்டு தகுதி நீக்கம் செய்தார். தற்போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த தகுதி நீக்கங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சி காலங்களிலே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment