வெள்ளத்தில் மிதக்கும் ஹூஸ்டன் நகரம்..,

ஹார்வி புயலினால் ஏற்பட்டுள்ள கனமழையால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரமே வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் கழுத்தளவிற்கு தண்ணீர் வியாபித்துள்ளது. அமெரிக்காவின் 4-வது பெரிய நகரமான ஹூஸ்டனில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. லட்சக்கணக்கான வீடுகளில் வெள்ளம் நிறைந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்பு பணியில் கடற்படையினர் மற்றும் விமான படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

40,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற ஒரு பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்டதில்லை என்று அந்நாட்டு வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஹூஸ்டனை சுற்றியுள்ள ஆறுகளில் கரை புரண்டோடும் வெள்ளம் நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. 

இது பற்றி பேசிய ஹூஸ்டன் நகரில் வசிக்கும் ஷிரோன் பிரவுன் என்ற இளைஞர், கனமழை, புயல், வெள்ளம் என யாவையும் இதுவரை கண்டிராத புதிய அனுபவமாக உள்ளது. பிரசோஸ் ஆறு கரைபுரண்டோடி கொண்டிருக்கிறது. தண்ணீர் மட்டம் எந்த அளவிற்கு உள்ளது என பார்க்க வந்ததாகவும், ஆனால் சாலைகளை பார்த்தாலே அச்சமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரசோஸ் ஆறு எந்நேரத்திலும் உடையும் அபாயம் உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 50,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

author avatar
Castro Murugan

Leave a Comment