பாஜக அலுவலகம்,அமித்ஷாவின் இல்லம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட வேண்டும் – கடுமையாக சாடிய ஆம் ஆத்மி!

பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லம் ஆகியவை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக  சாடியுள்ளது.

டெல்லி,ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர்.இதனால்,வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றம்:

இதனிடையே,டெல்லி,ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகள் கடைகளை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இதனால்,வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது.

மேலும்,அப்பகுதியில் எப்போதும்போல அமைதியான நிலை நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.ஆனால்,உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்திற்குத் தடை விதித்திருந்தாலும்,அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது.

பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி:

இந்நிலையில்,டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் இடிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளனர்.

அடுத்த கலவரம் எங்கே?:

மேலும்,ராம நவமியின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும் பாஜக மீது  குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக,டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில்:”நாட்டில் அராஜகச் சூழலை பாஜக உருவாக்கியுள்ளது. கலவரத்தை ஏற்படுத்துவதற்காக வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாக்களை நாடு முழுவதும் பாஜக குடியமர்த்தியுள்ளது. இதனால்,அடுத்த கலவரம் எங்கு நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி:

இதனைத் தொடர்ந்து,”நாட்டில் ஏற்பட்டு வரும் கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி,பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமித்ஷாவின் வீடுகளில் புல்டோசர்களை கொண்டு இடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நாட்டில் கலவரம் நடக்காது” என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி தெரிவித்துள்ளார்.

மேலும்,நாட்டில் சமீபத்திய வகுப்புவாத சம்பவங்களின் பின்னணியில் உள்துறை அமைச்சரும் பாஜகவும் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆளும் கட்சி “டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போக்கிரித்தனம், வன்முறை மற்றும் கலவரங்களை உருவாக்குகிறது” என்று கூறினார்.