“பவினா படேலின் வார்த்தைகள்;சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம்” -பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து..!

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா படேலின் வார்த்தைகள்,சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென்,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

இதனால்,பவினா பென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மேலும்,பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று பவினா சாதனைப் புரிந்துள்ளார்.

இதனால்,பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் மக்கள் பலரின் வாழ்த்து மழையில்  பவினா பென் நனைந்து வருகிறார்.

இந்நிலையில்,பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பவினா படேலின் வார்த்தைகள்,சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்திரம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டெபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பவினா பென் படேலுக்கு வாழ்த்துகள்! உலக அரங்கில் சாதனைப் பயணமும், பதக்கக் குவிப்பும் தொடரட்டும்.

பவினா பென் படேலின் சாதனைக்கு அவரது தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான் காரணம். என்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற பவினா பென் படேலின் வார்த்தைகள் அவருக்கு மட்டுமல்ல சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரம்”,என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக,இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோது நேற்று பவினா பென் , “நான் இதுவரை எந்த ஒரு தருணத்திலும் நான் ஒரு மாற்றுத்திறனாளி என நினைத்ததே இல்லை.சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை நான் நிரூபித்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.