பெய்ரூட் வெடிவிபத்து ! தமிழர்களை மீட்க எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது.  25 கிமீ  சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய  இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாகவும் 4 ஆயிரம் பேர்வரை காயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் மனதை கணக்கச்செய்கிறது.விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று உளமாற விழைகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து லெபனான் விரைந்து மீண்டு வரவேண்டும்.

மேலும் தமிழகத்திலிருந்து பணிபுரிவதற்காக லெபனான் சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவானதென்று இதுவரை தெரியவில்லை. குறிப்பாக வெடிவிபத்து நிகழ்ந்த தலைநகர் பெய்ரூட்-ல் வசித்துவந்த தமிழர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் நேற்றிரவு முதல் பெரும் பயத்துடனும், பதற்றத்துடனும் உள்ளனர்.

எனவே தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலம் லெபனானில் உள்ள இந்தியத் தூதகரத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அங்குச் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும் அவர்களது நிலை தற்போது எவ்வாறு உள்ளதென்பதனை கண்டறிந்து அது குறித்தான தகவல்களை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்,  குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வழிவகைச் செய்துதரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.