மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருங்க.. ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை!

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று பிற்பகல் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் சுமார் 30 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இதில், 7.6 ரிக்டர் அளவு வரை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் காட்சிகள், சுனாமி அலைகள் ஊருக்குள் புகுறும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை என ஜப்பான் பேரிடரில் தத்தளித்து வருகிறது. மீண்டும் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் குலுங்கும் ஜப்பான்.. சுனாமி அலைகளால் அதிர்ச்சி! பதபதவைக்கும் வீடியோ காட்சிகள்…

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்.

சேதங்கள் குறித்து விரைவில் மதிப்பிட வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும், மனித உயிருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது உள்ளிட்டவையில்  அவசரகால பேரிடர் அடிப்படையில் அரசு செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்