#AUSvPAK: சின்னசாமியில் பலப்பரீட்சை! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் தேர்வு!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா ஒரு வெற்றியையும், பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளது.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருந்தாலும், அது முழுமையாக வெளிப்படவில்லை என்பதே உண்மை. எனவே, இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அது வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோன்று, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 3 ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று, இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. எனவே, இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7-வது இடத்திலும் உள்ளது. இனி வரும் லீக் போட்டிகள் இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வாய்ப்பு உள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலியா லெவன்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

பாகிஸ்தான் லெவன்ஸ்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(c), முகமது ரிஸ்வான்(w), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் உள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்