#AUSvIND: கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி.. இந்திய அணி ஆறுதல் வெற்றி..!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஷிகர் தவான் 16 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்க சிறப்பாக விளையாடி 63 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இறங்கிய ஹர்திக் பாண்டியா, ரவீந்தர் ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்கள் குவித்தார். ரவீந்தர் ஜடேஜா 50 பந்தில் 66 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 302 ரன்கள் எடுத்தனர். 303 ரன்கள் இலக்குடன்  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மார்னஸ், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலேயே தமிழக வீரர் நடராஜன் பந்தில் 7 ரன் எடுத்து மார்னஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இறங்கிய ஸ்மித் 7 ரன் எடுத்து வெளியேற, பின்னர் இறங்கிய மொய்சஸ்(22), கேமரூன் கிரீன்(21) ரன்னில் இருவரும் பெவிலியன் திரும்பினர்.

மத்தியில் களம் கண்ட மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan