நீங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா…? அப்ப நீங்கள் கண்டிப்பாக இதை மாற்ற வேண்டும்…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் அவரது பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு துப்புரவு செய்யும் கருவியை மாற்ற வேண்டும். 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பலர் மீண்டும் தங்களுக்கு தொற்று பரவாது என்று நம்பி, பலவிதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும்,  தடுப்பூசிகள் ஒரு தடுப்பு நடவடிக்கைக்காக பயன்பட்டாலும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் 100 சதவீத பாதுகாப்பை அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நோயால் இன்னும் பாதிக்கப்படாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா ஆக்சிஜன் பற்றாக்குறை நெருக்கடியை சந்திப்பதோடு, பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவர் கண்டிப்பாக அவர் பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும் என்று பல் மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இவ்வாறு மாற்றுவதன் மூலம் அவர் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், நீங்கள் பயன்படுத்தும் பாத்ரூமை பயன்படுத்தக்கூடிய மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து, டாக்டர் பிரவேஷ் மெஹ்ரா கூறுகையில், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர் வட்டாரத்தில் யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து இருந்தால், தயவு செய்து அவர்கள் பல் துலக்கும் பிரஷ், நாக்கை துப்புரவு செய்யும் கருவி போன்றவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டாக்டர் பூமிகா மதன் கூறுகையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிந்து கொண்ட 20 நாட்களுக்குப் பின், பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு சுத்தப்படுத்தும் கருவியை மாற்ற வேண்டும். இதனை மீண்டும் பயன்படுத்தினால் இது சுவாசக் குழாய்களில், அதாவது நமது வாய் வழியாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்கி சுவாச பாதை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு துப்புரவு செய்யும் கருவிகளை மாற்றும்போது வாய் வழியாக வைரஸ் பாக்டீரியாக்களை உருவாவதை தடுக்கலாம்.  இவர்கள் மவுத்வாஷ் அல்லது சூடான உப்பு நீரை வைத்து வாயை சுத்தம் செய்வது சிறந்தது என்றும், ஒரு நாளைக்கு வாய்வழி சுகாதாரத்தை இரண்டு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இருமல், தும்மல், பேசுதல், சிரித்தல் போன்ற செயல்பாடுகளின் மூலமாக ஒரு நபரிடம் இருந்து மற்றவரிடம் பரவுகிறது. இந்த வைரஸ் காற்றில் சில மணிநேரங்கள் தங்கி இருக்கக் கூடியது. நெரிசலான இடங்களிலும், காற்று இல்லாத இடங்களிலும் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

 எனவே, பாதிக்கப்பட்ட நபரின் பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு சுத்தம் செய்யும் கருவியில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க நாட்களுக்கு தங்கி இருக்க வாய்ப்புள்ளது. எனவே இது மீண்டும் உங்களுக்கு தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் பாதிப்பை கொண்டு வரலாம். எனவே நீங்கள் பல்துலக்கும் கருவி மற்றும் நான்கு துப்புரவு செய்யும் கருவியை மாற்றுவது மிகவும் நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.