“எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியுள்ளேன்” – சசிகலா..!

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தான் அலோசனை கூறியுள்ளதாக சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா அவர்கள்,கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடேயே தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது,தான் மீண்டும் கட்சிக்கு வருவதாகவும்,அம்மா ஜெயலலிதா போல ஆட்சியை நடத்துவதாகவும் தெரவித்தார்.

ஆனால்,இதற்கு அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனையடுத்து,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் “சசிகலா அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”,என்று கூறினார்.

இந்நிலையில்,எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தான் அலோசனை கூறியுள்ளதாக தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது:”எம்.ஜி.ஆர் அவர்களோடு சேர்ந்து பயணித்துள்ளேன்,அது பலருக்கு வெளியே தெரியாது.மேலும்,கட்சி விசயமாக நிறைய கருத்துகளை தலைவர் என்னிடம் கேட்டுள்ளார். அப்போது கூட நான் மிகவும் பொறுமையாக,இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் தலைவரே என்று ஆலோசனை கூறியுள்ளேன். அதேப்போன்று,அம்மா கோபமாக முடிவெடுத்தால் கூட தொண்டர்களுக்காக நீங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லிதான் கட்சியை சிறப்பாக கொண்டு சென்றோம்.

நேற்று கூட தலைவர் வீட்டில் இருந்து வந்து என்னை சந்தித்து,கண்டிப்பாக நீங்கள் வரணும்,அதுதான் சரியாக இருக்கும்  என்று பேசிவிட்டு போனார்கள்.எனவே,தலைவர் ஆரம்பித்த கட்சி பிரிந்து இருக்க கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம்.ஏனெனில்,முதல்முறையாக அம்மா -ஜானகி அம்மா இருவரும் பிரிந்த சமயத்தில் முழு முயற்சியோடு ஈடுபட்டு  இணைத்தோம்.அதனால்,சிறுவயதிலே அரசியல் முதிர்ச்சி எனக்கு வந்துவிட்டது”,என்று தெரிவித்துள்ளார்.