#Alert:இன்னும் அபாயகரமான கொரோனா வேகமாகப் பரவும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் ஏரளாமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்,பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரது வாழ்க்கையே திசை திரும்பியது.

இந்த நிலையில்,தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்று மக்கள் பலரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில்,மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் உலகிற்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது,மோசமான கொரோனா தொற்றுநோய் இன்னும் வரவில்லை என்றும்,டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளைக் காட்டிலும் “இன்னும் கூடுதலான கொரோனா பரவலும் மற்றும் இன்னும் அபாயகரமான கொரோனா மாறுபாடு ஏற்படக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பில்கேட்ஸ் கூறியதாவது, “இதுவரை மோசமான கொரோனா மாறுபாட்டை நாங்கள் பார்த்தது கூட இல்லை.ஆனால் இனி மிகவும் வீரியம் மிக்க மாறுபாடு உருவாகும் ஆபத்து உள்ளது.கொரோனா தொற்றுநோய் ஒரு மாறுபாட்டை உருவாக்கும் அபாயத்தில் நாம் இருக்கிறோம்,அது அதிக அளவில்  பரவக்கூடிய மற்றும் இன்னும் ஆபத்தானதாக இருக்கும்” என்று கூறினார். எனினும்,வரவிருக்கும் தொற்றுநோயைச் சமாளிக்க,தொற்றுநோயைத் தடுக்கும் கொரோனா தடுப்பூசிகள் அவசரமாகத் தேவை என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்பாக,கொரோனா தொற்றுநோய் மோசமடையக்கூடிய 5 சதவிகித ஆபத்து இருப்பதாகவும்,உடனே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க உலகத் தலைவர்கள் அதிகம் செலவிட வேண்டும் என்றும் பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.அதே சமயம்,கொரோனா அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் சர்வதேச ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் கணினி மாதிரியாளர்கள் உட்பட சர்வதேச நிபுணர்கள் குழுவை உருவாக்க வேண்டும் என கேட்ஸ் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக,உலக சுகாதார நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய தொற்றுநோய் மறுமொழி குழுவிற்கும்,நிலைமையை முன்கூட்டியே சமாளிக்க கூடுதல் முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே,பில்கேட்ஸ் கடந்த பல ஆண்டுகளாக ஒரு தொற்றுநோய் பற்றி எச்சரித்து வருகிறார். 2015 இல் சூப்பர் வைரஸ் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார்.மேலும்,கேட்ஸ் “அடுத்த தொற்றுநோயைத் தடுப்பது எப்படி” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்,இது தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அடுத்ததை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.