கடத்தல் விவகாரத்தில் அஜித் படநடிகர் நீதிமன்றத்தில் சரண்!

வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூபாய் 50 லட்சம் பறித்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியின் தாளாளர் செந்தில் குமாரை கடத்தி 50 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த கலீம், முத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதர்ஷ் பள்ளியின் முன்னாள் ஆசிரியை பிரியாவின் கணவரான, துணை நடிகர் அரி இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து கடத்தல் கும்பலை சுற்றிவளைக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நடிகர் அரி…

படத்தில் கடத்தல் கும்பலை பிடிப்பது போல நடித்த அரி, நிஜத்தில் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக இருந்து, முறையாக திட்டமிட்டு, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்காணித்து போலீசாரை திசைதிருப்பி 50 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றுள்ளார் என்கிறது காவல்துறை.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் அரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சினிமாவில் வருவது போல கடத்தலுக்கு திட்டமிட்டுள்ளார். ஒரு மாதமாக பள்ளி தாளாளர் செந்தில்குமாரை கண்காணித்து இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார் அரி என்கின்றனர் காவல்துறையினர்.

செந்தில்குமாரிடம் எப்போதும் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்று ஆசிரியை பிரியா கொடுத்த தகவலின் பேரிலேயே நடிகர் அரி இந்த கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. அரியுடன் கூட்டாளிகள் கலீம், முத்து, உதயகுமார் ஆகிய 3 பேர் இந்த கடத்தல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

பனிகுல்லா அணிந்து வந்து 50 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற முத்து அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, மொட்டையடித்து விட்டு தலைமறைவாக இருந்த போது சிக்கிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

அவனை தொடர்ந்து செங்குன்றத்தில் பதுங்கி இருந்த கலீமையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அவர்களிடம் இருந்து 14 லட்சம் ரூபாயை மீட்ட காவல்துறையினர். தப்பிச்சென்ற உதயகுமாரையும், நடிகர் அரியையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

நடிகர் அரி, தன்னுடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் ஒன்றாக நடித்த கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த வெல்டிங்கடை உரிமையாளர் ஒருவரிடம் செல்போனில் பேசியதை கண்டறிந்த போலீசார் அங்கும் விசாரணை நடத்தினார்கள். கடந்த 6 நாட்களாக அங்கு தங்கி இருந்த நடிகர் அரி, அவருக்கு கொடுக்க வேண்டிய 35 ஆயிரம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டு திருச்சிக்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெல்டிங்கடை உரிமையாளரையும் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். நடிகர் அரியை தேடி போலீசார் திருச்சி சென்றனர்.

இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment