மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது!- அன்புமணி ராமதாஸ்

யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.

இந்நிலையில்,கடந்த 18 ஆம் தேதி அப்பெண்ணுக்கு பிரசவ வலி திடீர் என்று ஏற்பட்ட நிலையில்,லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும், அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமானதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்!

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்!

யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.