3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் – போராட்டத்திற்கு முழு ஆதரவு என அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தீர்மானமும் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது டெல்லி அரசு.இன்று டெல்லி சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு  சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டமன்றத்திற்குள்  கிழித்தெரிந்தார்.”விவசாயிகளுக்கு எதிரான இந்த கருப்பு சட்டங்களை நான் ஏற்க மறுக்கிறேன் “என்று அவர் நகலைக் கிழித்தபோது கூறினார்.மக்கள் விரோத வேளாண் சட்டங்களை டெல்லி அரசாங்கம் முழுமையாக எதிர்ப்பதாகவும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.