ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வில்லையென்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மறுபக்கம் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு, எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு குறித்து பேசுவதில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் தேவையற்றவைகளை பேசி வருகிறார், அவரின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது. ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை, அவரின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாகதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது, ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டிக்க வில்லையென்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள். பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் திமுகவில் தலை தூக்கியதன் விளைவு தான் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment