#Breaking:அதிர்ச்சி…சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா!

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,தென் ஆப்பிரிக்கா,பிரிட்டன்,சிங்கப்பூர் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி,ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதித்த தஞ்சையை சேர்ந்த இவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனைக்கு பிறகு அவருக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிய வரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும்,தொற்று பாதித்த நபருக்கு திருச்சிஅரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.