இந்தியாவுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை..  துணை குடியரசு தலைவர் காட்டம்.!

Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் பற்றியும் அதில் விவாதங்கள், கருத்துக்கள் பகிரப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்வுகளுக்கு தற்போது கருத்து தெரிவித்துள்ள இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், அமெரிக்கா, ஜெர்மன் உள்ள நாடுகளின் கருத்துக்களுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவனத்தின் 70வது ஆண்டு விழாவில் இதனை குறிப்பிட்டு பேசினார்.

அவர் கூறுகையில், இந்தியா வலுவான நீதித்துறையை கொண்டுள்ள ஓர் மிக பெரிய ஜனநாயக நாடு. இது எந்த தனி நபராலும், எந்த ஒரு குழுவாலும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவின் ஆட்சி நிலைமை குறித்து யாரிடமிருந்தும் கருத்துக்களோ, உங்களது பாடங்களோ அது எங்களுக்கு (இந்தியாவுக்கு) தேவையில்லை.

இந்திய சட்டத்தின் கீழ் அனைவரும் சமமானவர்களே. கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பலர் தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். இம்மாதிரியான செயல்கள் மூலம் மோசமான குற்றத்தை மறைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது போன்ற சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை தாங்களே பலிகடாவாக மாற்றி விடுகிறார்கள். ஊழல் என்பது ஒரு மாற்று பாதை அல்ல. அது சிறைக்கு செல்லும்பாதை என்றும் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உரையில் பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.