இன்று மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தல்;நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் முன்னதாக போர்க்கொடி தூக்கினர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.

இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து,ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து,மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும். ஆளுநரின் உத்தரவுப்படி மகாராஷ்டிரா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,முதலமைச்சர்,சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில்,முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார்கள்.இதற்கிடையில்,கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.அதேசமயம்,மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்,இன்று அப்பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு,சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதே சமயம்,மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதனிடையே,மகாராஷ்டிர சட்டப் பேரவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சிவசேனாவின் தலைமைக் கொறடா சுனில் பிரபு, அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment