பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் – மத்திய வேளாண் அமைச்சர்!

விவசாயிகள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு நிரந்தரமாக தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்டமாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எதுவும் போராட்டத்துக்கு தீர்வாக அமையவில்லை. விவசாயிகள் நிரந்தரமாக இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே தற்பொழுது வரையிலும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட கூடிய விவசாயிகள், உழவர் சங்கங்கள் உடனான முறையான பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்பு அவர்களின் நலனுக்காக தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு விரைவில் போராட்டத்தை கைவிடுவார்கள் எனவும், பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் எனவும் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal