வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தநிலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்தவோ, மலைப்பகுதியை பாதுகாக்கவோ வனத்துறையினர் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (திங்கள் கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகவும், சுற்றுலாவிற்காகவும் சென்ற ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கித் தவித்து வருகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காட்டுத்தீயில் சிக்கியவர்களில் மீட்கப்பட்டவர்கள் போக இன்னும் மீதமுள்ளவர்களையும் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள் பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 9 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் என செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஏற்கனவே இம்மலைப்பகுதியில் பலமுறை இது போன்ற தீ ஏற்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இத்தீயைக் கட்டுப்படுத்தவோ, மலைப்பகுதியை பாதுகாக்கவோ உடனடி நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்களையும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும் வனப்பகுதியில், மலையில் தீ ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மலைக்குச் செல்பவர்கள் வனத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும், மலையேறச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை கொடுக்க வேண்டும், தேவையான முதலுதவி மருத்துவ உதவி கொடுக்கப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும், தேவையில்லாமல் இரவு நேரங்களில் தங்க அனுமதி அளிக்கக்கூடாது, தேவைப்பட்டால் தங்குவதற்கான பாதுகாப்பு அம்சங்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
முக்கியமாக, மலைப்பகுதியில் தீ மூட்டி கவனக்குறைவாக இருப்பதாலும், சமூக விரோதிகளாலும், வெப்பம் அதிகமாவதாலும், எதிர்பாராமல் திடீரென்று தீ ஏற்படுவதற்கும் வழி வகைகள் உண்டு. இவற்றையெல்லாம் வனத்துறையினர் கவனத்தில் கொண்டு தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள், முதலுதவி ஏற்பாடுகள், மருத்துவ உதவிகள், தீயணைப்பு வண்டிகள், காவல் நிலையம், உதவியாளர்கள் என அனைத்து முன்னேற்பாடுகளையும் வனத்துறையினர் மேற்கொள்கின்றனரா என்பதை தமிழக அரசு தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி, சுற்றுலாப் பயணம் போன்ற காரணங்களுக்காக செல்ல விரும்புவோர் எந்த காரணத்திற்காக எப்போது செல்கின்றனர் என்ற முழு விவரத்தையும் வனத்துறையினரிடம் பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒப்புதல் பெற்ற பின்பு மலைப்பகுதிக்குச் செல்லும் நபர்களுக்கு அவர்கள் மலையேறிச் சென்று திரும்பி வரும் வரை அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், இயற்கை வளங்கள், மூலிகைச் செடிகள், வன விலங்குகள் மற்றும் வனப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் ஆகியவற்றை பாதுகாத்து மலைக்கு வரும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
குறிப்பாக வனப்பகுதிகளில் உள்ள மரங்களையும், இயற்கை வளங்களையும் தொடர்ந்து கண்காணித்து பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. சமீப காலமாக மழை பெய்யாமல், தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகிக்கொண்டே போகின்ற சூழலில் ஆளும் ஆட்சியாளர்களும், பொது மக்களும் மரங்கள் வளர்ப்பதையும், மரங்களை பாதுகாக்கவும் கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்காலங்களில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மரங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதோடு, சாலைகள் அமைப்பதற்கும், பிற கட்டாயத்தேவைக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதே சமயம் இப்படி வெட்டப்படுகின்ற மரங்களுக்கு மாற்றாக வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க வேண்டும். மரங்கள் வனப்பகுதிகளில், மலைப்பகுதிகளில் அதிகம் இருப்பதால் அவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் பணியாகும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.