மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை ! சரணடையும் மாவோயிஸ்ட்டுகளுக்கு மத்திய அரசு தகவல்……
மாவோயிஸ்டுகளுக்கு ஒரு நாளும் மன்னிப்பே கிடையாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டம் .
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ள தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஏதும் உள்ளதா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில் நக்சலைட்களை கட்டுப்படுத்தவும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சூழ்நிலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல முனை திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அட்டகாசமும், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசமும் உள்ளது. அவர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்களின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகிறது. எனினும் மாவோயிஸ்ட்களின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்ட விதிகளின்களின்படியே அரசு நடந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
source: dinasuvadu.com