கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் என்பது சாத்தியமற்றது – மத்திய அரசு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு  நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 22,351 கோடிதான் எனவும், ஆனால் கொரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும், மேலும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் எனவே ஒவ்வொரு கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். மொத்த செலவினம் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறு இழப்பீடு வழங்குவதன் மூலம் ஏற்படும் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி குறையும் எனவும், வெள்ளப்பெருக்கு நிலநடுக்கம் புயல் போன்ற பேரிடர்கள் போலல்லாமல், கொரோனாவிற்கு பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள், தடுப்பூசிகள் என மத்திய அரசும் மாநில அரசும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து உள்ளதாகவும், இன்னும் எத்தனை கோடி செலவழிக்க வேண்டும் என்பதே தெரியாது எனவும், அடுத்து வரக்கூடிய கொரோனா அலையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal