M.S.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.! ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, 2013 ஐபிஎல் சூதாட்டட் விவகாரத்தில் தொடர்புடையதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அப்போது சூதாட்ட வழக்கை விசாரிக்கும் குழுவில் சம்பத் குமார் பொறுப்பில் இருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என கூறியிருந்தார். அதன் பிறகு தன் மீதான சூதாட்ட புகாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்து இருந்தார். சூதாட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

அதனை தொடர்ந்தும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூதாட்டத்தில் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார். இதனை அடுத்து தோனி தரப்பில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது தோனியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியதற்காக 100 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி விசாரணை அறிக்கையை வெளியிட்டது தொடர்பாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து, தனக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வேண்டும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அவருக்கான 15 நாள் சிறை அடுத்த 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.