நாடாளுமன்ற அத்துமீறல்.. முக்கிய ஆதாரங்களை எரித்த லலித்.? தீவிரமடையும் விசாரணை.!

நேற்று முன்தினம் (டிசம்பர் 13) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22ஆம் ஆண்டு  பாராளுமன்ற தாக்குதல் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். அவர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேற்கண்ட இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட அனுமதிநுழைவு சீட்டு பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரஞ்சன், சாகர் சர்மா உள்ளே கோஷமிட்ட அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் படம்பிடித்தார். இவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் விஷால் சர்மா என்பவர் நாடாளுமன்றம் அழைத்து வர உதவி செய்துள்ளார்.

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவு..!

இதில் படம் பிடித்த லலித் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர். லலித்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த லலித் நேற்று டெல்லி போலீசாரிடம் நேரில் வந்து சரணடைந்தார்.  கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான லலித் ஜா நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலை விசாரணை செய்யும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம், அமோல் ஆகியோரரது செல்போனை லலித் தான் வைத்திருந்தார் என்று கூறப்பட்டு வந்தநிலையில் , அவர் அனைத்து செல்போன்களையும் எரித்துவிட்டதாக கூறப்படுகிறது. போன்களை எரித்ததாக வந்த தகவலை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

லலித் ஜா காவல்துறையிடம் கூறுகையில்,  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை படம்பிடித்து, வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதாகவும், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு விடியோவை அனுப்பியதாகவும் கூறியுள்ளார். 48 மணிநேரம் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக இருந்த லலித் ஜா, தனது நண்பர் மகேஷ் உடன் ராஜஸ்தானின் நாகௌருக்குச் சென்றதாகக் கூறினார். லலித் ஜா மற்றும் மற்றொரு நபர் மகேஷ் நேற்று (வியாழன்) மாலை டெல்லிக்கு திரும்பி, அதன் பிறகு லலித் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார். இந்த  சம்பவத்தில் தொடர்புடைய 7வது நபரான மகேஷ் என்பவரையும் டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேருக்கும் 7 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.