இனவெறி சர்ச்சையால் INDvsAUS இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 10 நிமிடம் நிறுத்தம்.!

இனவெறி சர்ச்சையால் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின், ரஹானே, அஷ்வின், நடுவர்களாக இருந்த பால் ரீஃபல், பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டது.

இதனை அறிந்த பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில் இன்று 3வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி பந்துவீசி கொண்டிருக்குபோது, சில ரசிகர்கள் மீண்டும் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்திய வீரர் முகமது சிராஜ் திடீரென பந்துவீச்சை நிறுத்தினார்.

இதன் காரணமாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்டம் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழந்து 312 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இரண்டு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து, புஜாரா மற்றும் கேப்டன் அஜின்கியா ரஹானே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்