வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய விட்ருவேன்.. மிரட்டிய பாஜக வேட்பாளர்.!

Election2024 : வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய விட்ருவேன் என பறக்கும் படை அதிகாரிகளை பாஜக வேட்பாளர் மிரட்டும் தொனியில்பேசியுள்ளார் .

தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், சாலையில் வரும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரது வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், ஈரோடு மாவட்டம்  கோபிசெட்டிபாளையம் அருகே தனது வாகனத்தில் ஆதரவாளர்களுடன் வந்து கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அவரது காரை வழிமறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில், அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டும் தொனியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம், உங்களது பெயர் என்ன.? நீங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்.? திமுகவினர் இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னார்களா? முதலில் மரியாதையாக பேசுங்கள் இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என கூறினார்.

அதற்கு பறக்கும்படை அதிகாரிகள், நாங்கள் மரியாதையாக தான் பேசுகிறோம். அனைவரது கார்களையும் இப்படி தான் சோதனை செய்கிறோம். நாங்கள் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. என்று கூறி கொண்டு இருக்கும் போதே,  மரியாதையா பேசுங்க என்று சொல்லியபடி இருந்தார்,  உடனே அங்குள்ள மற்றொரு போலீசார் அவரை சமாதானப்படுத்தினார். பின்னர், ஏ.பி.முருகானந்தம் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.

ஏ.பி.முருகானந்தம் அதிகாரிகளிடம் நடந்து கொண்ட விதம் பற்றி பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, குன்னத்தூர் காவல் நிலையத்தில் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது கோபிசெட்டிபாளையம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.