போட்டியின்றி காங்கிரஸ் கட்சி தலைவரானார் ராகுல்காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர்.

ஆதலால், காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம், ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் பிறகு நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட 89 மனுக்களும் தகுதியானவையாக இருந்ததால், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முள்ளபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியை தவிர, வேறு யாருக்கும் ஆதரவு மனுக்கள் வரவில்லை. ராகுல் காந்தி மட்டுமே கட்சித்தலைவர் பதவிக்கு ஒரே வேட்பாளராக இருக்கிறார். ஆதலால் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

இருந்தாலும், மனுக்களை வாபஸ் பெற 11-ந் தேதி கடைசி நாள் என்பதால்,  அன்றுதான், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சிகாரர்கள் தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment