தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு…!!

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 523 ரன்கள் குவித்தது. அக்‌ஷாத் ரெட்டி இரட்டை சதம் அடித்தார்.

37 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-ஐதராபாத் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் நடந்து வருகிறது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஐதராபாத் அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 523 ரன்கள் குவித்துள்ளது. தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் ஐதராபாத்தின் ரன்வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனும் அக்‌ஷாத் ரெட்டி 248 ரன்களுடன் (477 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அக்‌ஷாத் ரெட்டி இரட்டை செஞ்சுரி அடிப்பது இதுவே முதல் முறையாகும். அவருக்கு ஒத்துழைப்பு தந்த பவனகா சந்தீப் 130 ரன்களிலும், சாய்ராம் 42 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

ரோட்டாக்கில் நடந்த ஜார்கண்ட் – அரியானா அணிகள் இடையிலான (சி பிரிவு) ஆட்டம் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அரியானா 81 ரன்னிலும், ஜார்கண்ட் 143 ரன்னிலும் சுருண்டன. 62 ரன்கள் பின்தங்கிய அரியானா 2-வது இன்னிங்சில் 72 ரன்னில் முடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 11 ரன் இலக்கை ஜார்கண்ட் அணி 4 ஓவர்களில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடந்து வரும் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் சேர்த்து 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தனது 10-வது முதல்தர போட்டி சதத்தை எட்டிய ரவீந்திர ஜடேஜா 178 ரன்கள் (326 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

புதுச்சேரியில் நடந்து வரும் மேகலாயாவுக்கு (பிளேட் பிரிவு) எதிரான லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான புதுச்சேரி முதல் இன்னிங்சில் 389 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் டி.ரோகித் (130 ரன்), பராஸ் டோக்ரா (101 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மேகலாயா அணி நேற்றைய முடிவில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

திமாபுரில் நடக்கும் நாகலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்கிம் அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து 2-வது இரட்டை சதத்தை ருசித்த மிலின்ட் குமார் 224 ரன்கள் (215 பந்து, 31 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கினார். அடுத்து 195 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நாகலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 97 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வரும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான மோதலில் (பி பிரிவு) பெங்கால் அணி, கேப்டன் மனோஜ் திவாரியின் (201 ரன்) இரட்டை சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுக்கு 510 ரன்கள் திரட்டி ‘டிக்ளேர்’ செய்தது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment