ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது…!!

இஸ்ரோவின் ஜிசாட்-7ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. அதற்கான கவுண்ட் டவுன் இன்று துவங்குகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை வலுப்படுத்துவது மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று மதியம் தொடங்குகிறது.
இரண்டாயிரத்து 250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு, விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக காட்டும். இது, வான்வழி தாக்குதலில் பெரிதும் பயன்பட இருக்கிறது. இந்தியாவின் 35-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.
இதனிடையே, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன், தகவல் தொடர்புக்காக 35 நாட்களில் மூன்றாவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனைப் படைக்க இருப்பதாக கூறினார். வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment