ஆந்திராவில் இன்று உதயமாகும் 13 புதிய மாவட்டங்கள்!

ஆந்திரா:ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது.

ஆந்திர மாநில அரசு,கடந்த ஜனவரியில்,ஏற்கனவே உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு  கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு,பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அழைத்தது.

இதனையடுத்து,ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களில் இருந்து மேலும் 13 புதிய மாவட்டங்களை பிரித்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி,மண்யம்,அல்லூரி சீதாராம ராஜு,அனகாப்பள்ளி, காக்கிநாடா, கோன சீமா, ஏலூரு,என். டி.ஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தி யாலா,ஸ்ரீசத்யசாய்,அன்ன மய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி ஆகிய புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில்,13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கிறார்.

இதனிடையே,ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றியமைத்தது மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது.

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால்,ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றுவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.