தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் – சீனாவுக்கு பதிலடிகொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்

தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதன் பின்னர் தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது கொரோனா.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அலட்சியமே கொரோனா பரவுவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வந்தன.மேலும் அமெரிக்கா சீனா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.  

இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவும் சீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.அதாவது,கொரோனாவை சீனா மறைத்ததால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதன்விளைவாக ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையே சற்று பனிப்போர் அதிகரித்தது.குறிப்பாக ஆஸ்திரேலிய மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது சீனா.பார்லி இறக்குமதிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.சீனர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சீன சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவை  தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில்,நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம்.எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.