பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவ தயார்.. பதிலடி கொடுத்த இந்திய அரசு!

பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த நிலையில், அவருக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனவால் இதுவரை 1.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,463க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. மேலும் அந்நாட்டில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக, கடுமையான ஊரடங்கை பிறப்பிக்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மேலும், பாகிஸ்தானில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெரும் நிதிச்சிக்கல் இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ தாங்கள் கையாண்ட பணப் பரிமாற்றத் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்ததாவது, “பாகிஸ்தானுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீத அளவுக்கு கடன் சுமை உள்ளது என்பதை அந்நாடு நினைவு கொள்வது நல்லது. அதே சமயத்தில், கொரோனா பாதிப்புக்கான இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை காட்டினும் பெரியது” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.