ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – சசிகலாவின் மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக கட்சியில் பல்வேறு சலசலப்பு மற்றும் பிளவுகள் ஏற்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் கடந்த 2017 ஆம் இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து தினகரன், சசிகலா ஆகிய இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் திடீரென அம்மா முன்னேற்ற கழகத்தை தினகரன் தொடங்கினார். அந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்