தடையை மீறி சட்டமன்ற முற்றுகை ! காவலர்கள் குவிப்பு

இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு இடையில்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம்,இன்று  நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மார்ச் 11-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக தெரிவித்தது.

இதன் பின் திட்டமிட்டப்படி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்நிலையில் இன்று அறிவித்தபடி இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளனர். இதன் விளைவாக  தலைமைச்செயலகம் முழுவதும் 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில், 550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .போராட்டம் நடைபெறவுள்ள சேப்பாக்கத்தில் 5 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும்  60 வீடியோ கேமராக்கள், 20 சிசிடிவி கேமராக்கள் , 5 ட்ரோன் கேமராக்கள்  ஆகியவற்றை பயன்படுத்தி போராட்டத்தை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.