இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் – கமல்ஹாசன் ட்வீட்

பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் – கமல்ஹாசன் ட்வீட்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னையை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில், நேற்று 55 வயதுடைய நரம்பியல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் சென்றனர். ஆனால், கீழ்பாக்கம் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர்  மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்காக வேலங்காடு சுடுகாட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அண்ணா நகர் அருகே காந்திநகரில் உள்ள மக்கள் அந்த சுடுகாட்டில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 20 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலைமிரட்டல், ஊரடங்கு மீறல், சிறைபிடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தாதீர்கள், தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், உயிரை கொன்று குவிக்கும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால், நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் என்று கூறியுள்ளார். மேலும் பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்