நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர்  குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி-முதலமைச்சர் அறிவிப்பு

நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர்  குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது.

நீலகிரியில் கனமழை காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மழை தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ,நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையையொட்டி, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்பு & மீட்பு பணி, காவல்துறை  உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 இராணுவ வீரர்கள் உட்பட  491 நபர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளை சீர்செய்ய 29 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்க,23 நிரந்தர மருத்துவ குழுக்கள்,13 நடமாடும் மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

காட்டுக்குப்பையில் கனமழையில் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்களும் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.அவலாஞ்சியில் சிக்கியிருக்கும் 40 நபர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறு சூலூரிலுள்ள இந்திய விமானப்படையிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர் உதயகுமார்  வருவாய் &பேரிடர் மேலாண்மைதுறை அதிகாரிகளை நீலகிரிக்கு சென்று மீட்பு,நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.கனமழை காரணமாக உயிரிழந்த  சென்னன்,விமலா,சுசிலா,பாவனா மற்றும் அமுதா ஆகிய  5 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.